திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 118 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில், இன்று 5 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 113 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. கலால் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளின் அடிப்படையில், 10 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக ஒரு தவறுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, ரூ.7,500 அபராதம், ஒரு மாதம் பணியிடை நீக்கம் மற்றும் பணி மாறுதல் என ஒரே தவறுக்கு மூன்று தண்டனைகள் வழங்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வந்தனர். ஆனால் அவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால், அலுவலகத்திற்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் பலவும் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் திருநெல்வேலி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள FL-2 பார்களில் கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சில FL-2 பார்களில் காவல்துறை பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது முதலில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகள்
113 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் போராட்டம் – 5 கடைகள் மட்டுமே திறப்பு
🕒 24 ஆக., 2026, 09:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
