விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, சிவகாசியில் பெண் பட்டாசுத் தொழிலாளர்கள் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், தொழிலகப் பாதுகாப்புத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த சில மாதங்களாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதில் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலகப் பாதுகாப்புத் துறை சார்பில் சுமார் 200 தொழிற்சாலைகளும், மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் 80-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் நடவடிக்கைக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொடர் போராட்டங்களின் காரணமாக, தமிழக அரசின் நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனமான பெசோ (PESO) சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறக்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றை திறப்பதற்கான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மூடப்பட்டுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், பட்டாசுத் தொழில் தொடர்பான பிரச்சினையில் தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பட்டாசுக் கூலித் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெசோ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், ஒரு வார காலத்திற்குள் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்து, மூடப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஒரு வாரத்திற்குள் மூடப்பட்டுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக பட்டாசுக் கூலித் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

