ஆக.22: நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியில் உள்ள வெள்ளையாற்றில் தனியார் விடுதிகளின் கழிவுநீர் நேரடியாகக் கலப்பதாகக் கூறி, அதற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 23) ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என செருதூர் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
செருதூர் மீனவ கிராமங்களின் முக்கிய வாழ்வாதாரமாக வெள்ளையாறு இருந்து வருகிறது. இந்நிலையில், ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் இருந்து பெரிய பிவிசி குழாய்கள் மூலம் கழிவுநீரை ஆற்றில் நேரடியாக வெளியேற்ற முயற்சி செய்யப்பட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணியை மீனவர்கள் தடுத்து நிறுத்தியதுடன், அங்கு வந்த வாகனங்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதுடன், ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளும் பொதுமக்களுக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
5-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்
கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று 5-வது நாளாகவும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதனால் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் நிக்ஸன் தலைமையிலான அதிகாரிகள், ஆற்றில் பதிக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாய்களை அப்புறப்படுத்தினர்.
ஆனால், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறி, செருதூர் கிராம பஞ்சாயத்தார் கருணாமூர்த்தி தலைமையில் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதில், பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நேரடியாக முறையிட்டும் இதுவரை நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து, ஆகஸ்ட் 23-ம் தேதி செருதூர் மீன்பிடி இறங்குதளத்தில் திரளான ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

