ராமநாதபுரம்: தொண்டி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி கடலில் விழுந்த மீனவரின் உடல், இரண்டு நாட்களுக்குப் பிறகு கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடற்கரை பகுதியைச் சேர்ந்த தூண்டிமுத்து என்பவருக்குச் சொந்தமான படகில், ஹனிபா, ஷேக் முகமது உள்ளிட்ட மூன்று மீனவர்கள் கடந்த 20-ம் தேதி காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஷேக் முகமது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். அவரை சக மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஷேக் முகமதுவின் உடல் தாமோதரப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தொண்டி கடலோர காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி கடலோர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

