மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான, வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீ வதான்யேஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உத்தர மாயூரத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற குரு அனுகிரக ஆலயத்தில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி புனித நீர் அடங்கிய கடங்கள் மற்றும் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் மகா பூரணாகுதி நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு, மலர் அலங்காரங்களுடன் பஞ்சமுக தீபாராதனை மற்றும் சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.









