வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் பகுதியில் சொத்துத் தகராறு காரணமாக இளைய மகன் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்ஜி புதூரைச் சேர்ந்தவர் பெருமாள் (48), இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு தினகரன் (25), மயிலழகன் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப சொத்துத் தகராறு காரணமாக இவர்களுக்கு இடையே பாகப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது. இதில் தினகரனுக்கு 8 ஏக்கர் நிலமும், மயிலழகனுக்கு 4 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. தினகரன் விவசாயப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் வலது கையை இழந்தவர் என்பதால், அவருக்குக் கூடுதலாக நிலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது இளைய மகன் மயிலழகனுடன் தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையில், தினகரன் தனது தந்தை பெருமாள் மற்றும் பாட்டி பச்சையம்மாளுடன் நிலத்தில் உள்ள தனி வீட்டில் வசித்து, தனக்குரிய 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அவருக்குச் சொந்தமான பகுதியில் புதிய கடைகளைக் கட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதன் கிரகப்பிரவேசத்தையும் நடத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய கடையில் தந்தை பெருமாளும் பாட்டி பச்சையம்மாளும் தங்கியுள்ளனர். திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தினகரன் மட்டும் தனியாக வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் பாட்டி பச்சையம்மாளும் தந்தை பெருமாளும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தினகரன் தலையின் பின்புறம் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விருதம்பட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தினகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விசாரணையில், இளைய மகன் மயிலழகன் தனக்கு வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டதாகவும், புதிதாகக் கட்டப்பட்ட கடைகளில் தனக்கு இரண்டு கடைகள் வேண்டும் என்றும், நிலத்தில் மீண்டும் பாகம் கேட்டு தினகரனுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஒரு கையை இழந்த நிலையிலும் டிராக்டர் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் செல்வது, சுயமாக விவசாயம் செய்வது என தன் உழைப்பால் வாழ்ந்து வந்த வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொத்துத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் தம்பி மயிலழகனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை மையமாகக் கொண்டும், மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









