மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் திருக்கார்த்திகை நாளன்று விளக்கேற்றலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் விளக்கேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நயினார் நாகேந்திரனை, அசம்பாவிதங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அவரது இல்லத்தில் முடக்கியுள்ளனர். அவரது வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கும் பொருட்டு, பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 480 பேர் அவரவர் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு காவல்துறையை ஏவி விடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய பாதுகாப்புடன் குறைந்தபட்சம் 10 பேராவது சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









