சிவகாசியில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் கடும் நெருக்கடி தருவதாகக் குற்றம்சாட்டி, அச்சமின்றித் தொழில் செய்ய வழிவகை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 'முதல் தலைமுறை பட்டாசு வணிகர்கள் நலச் சங்கத்தினர்' மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு மற்றும் பதுக்கலைத் தடுக்கும் நோக்கில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து பட்டாசு விற்பனைக் கடைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உரிய உரிமம் பெற்று முறையாகப் பட்டாசு கடை நடத்தி வருபவர்களையும் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்திலேயே அணுகுவதாக வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அற்பக் காரணங்களைக் கூறி கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் பட்டாசுகளைப் பறிமுதல் செய்வது போன்ற கெடுபிடிகளால், உரிமம் பெற்ற கடைகளை நடத்த முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, 'விருதுநகர் மாவட்ட முதல் தலைமுறை பட்டாசு வணிகர்கள் நலச் சங்கத்தின்' தலைவர் தாமஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை நேரில் சந்தித்து முறையீட்டு மனுவை அளித்தனர். அதிகாரிகளின் ஆய்வுகளால் வியாபாரம் செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும், அச்சமின்றித் தொழில் செய்ய ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வணிகர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

