நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்கு உட்பட்ட தெற்கு வாகைகுளம் ஊராட்சி, பலஸ்தீனாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நீர்த்தேக்க நிலம், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனாபுரம் கிராமத்தில் 130-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களின் குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக, கிராமத்திற்கு வடக்கே அரை கிலோமீட்டர் தொலைவில் அரசு சார்பில் நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் குமாரசாமி, தனக்குச் சொந்தமான சர்வே எண் 251/2-ல் உள்ள 61 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாகப் பத்திரம் பதிந்து வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, அங்கு கரைகள் அமைக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மும்பையில் வசிப்பதாகக் கூறப்படும் சுந்தரம் என்பவரது வாரிசுகள், தானமாக வழங்கப்பட்ட இந்த அரசு நிலத்தை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, கடந்த 2007-ம் ஆண்டு 'சென்னை வெஸ்டாஸ் ஆர்.ஆர்.பி இந்தியா லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு மோசடியாக விற்பனை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அந்த நிறுவனம் 2021-ம் ஆண்டில் இந்நிலத்தை முருகேசன் என்பவருக்கும், அவரிடமிருந்து 2025-ம் ஆண்டில் ஜோசப் நிக்சன் என்பவருக்கும் கைமாற்றியுள்ளது.
தற்போது நிலத்தை வாங்கியுள்ள ஜோசப் நிக்சன், சில வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையோடு அரசு நீர்த்தேக்கப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, 50 சென்ட் நிலத்தை அளந்து எல்லைக் கற்களை நட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நீர்த்தேக்கப் பகுதிக்குள்ளேயே புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்ததோடு, தண்ணீரைத் தேக்கி வைக்கும் தென்பகுதி கரையை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, 2007, 2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட மூன்று பத்திரங்களையும் உடனடியாக ரத்து செய்து, நிலத்தை மீண்டும் பலஸ்தீனாபுரம் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், போலி ஆவணங்களின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாகக் கூறப்படும் வாகைகுளம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

