கரூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தைச் சேர்ந்த வெற்றிப் பயணம் திட்டப் பேருந்து, கரூர் வழியாக உடுமலைப்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தது. திருக்காம்புலியூர் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதன் பின்பக்க பிரேக் ட்ரம் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டு பேருந்தைத் சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார். தொடர்ந்து, அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து புகையைக் முழுமையாகக் கட்டுப்படுத்தினர். பின்னர், அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் தங்களது பயணத்தைத் தொடர வழிவகை செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் மழைக்காலங்களில் அரசுப் பேருந்துகளுக்குள் தண்ணீர் புகுவது மற்றும் பேருந்துகள் பழுதடைந்து நடுவழியில் நிற்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகப் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, அரசுப் பேருந்துகளின் தரம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், பழுதடைந்த பேருந்துகளைச் சீரமைத்து பயணிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தவும் தமிழக அரசும் போக்குவரத்துத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









