ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் இன்று லாரி ஒன்று மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் தீவுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையாக சிவகாமி நகர் வழியாக காவல்துறையினரால் திருப்பி விடப்படுகின்றன. அந்த வகையில், இன்று காலை சிவகாமி நகர் வழியாகச் சென்ற லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்:
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முறிந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மின் விநியோகம் மீண்டும் சீரானது.








