தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே போலீஸ் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதே, அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் கட்டை மற்றும் கல்லுடன் ஒருவரையொருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், அந்த வழியாக வல்லம் நோக்கிச் சென்ற 41ஏ எண் கொண்ட அரசு பேருந்து அங்கு வந்தது. அந்தப் பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் திடீரென ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நபரை தாக்குவதற்காக ஆவேசமாகச் சென்றார். சற்றும் எதிர்பாராத அந்த நபரும் பதிலுக்கு அங்கிருந்த கல்லை தூக்கிக்கொண்டு தாக்க முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று இருவரையும் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். போலீசார் குவிக்கப்பட்டிருந்த இடத்திலேயே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கட்டையுடன் தாக்க முயன்றவர் அரசு பேருந்து நடத்துனர் என்பதும், கல்லை தூக்கியவர் தனியார் பேருந்து நடத்துனர் கோபிநாத் என்பதும் தெரியவந்தது. அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட முந்தைய வாக்குவாதம் முற்றியதே இந்த மோதலுக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் போலீசார் முன்னிலையிலேயே பேருந்து நடத்துனர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









