தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 25) பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாட்களிலும் மழை தொடரும்
ஆகஸ்ட் 26-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 27 மற்றும் 28-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

