நாட்டில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ சிறப்பு சரக்கு ரெயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் இருந்து வெங்காயத்தை அதிக தேவை உள்ள முக்கிய நகரங்களுக்கு விரைவாக கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.
சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வெங்காயம்
முதற்கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கொச்சி மற்றும் கவுகாத்தி ஆகிய 5 முக்கிய நுகர்வு மையங்களுக்கு நாசிக்கில் இருந்து வெங்காயம் ரெயில் மூலம் அனுப்பப்படுகிறது. அதிக அளவிலான வெங்காயத்தை முக்கிய மொத்த சந்தைகளுக்கு கொண்டு சென்று விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் விலையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக நாசிக் அருகே உள்ள லசல்கான் பகுதியில் இருந்து டெல்லிக்கு 800 டன்களுக்கும் அதிகமான வெங்காயம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் வெங்காய விலை உயர்ந்தது?
கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 24 நிலவரப்படி அகில இந்திய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.43.53 ஆக உயர்ந்திருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 59 சதவீதம் அதிகமாகும். சென்னையில் சில்லறை விலை சுமார் ரூ.60 வரை சென்றிருந்தது.
பருவகால வரத்து குறைவு மற்றும் சில உற்பத்திப் பகுதிகளில் ஏற்பட்ட விநியோக அழுத்தம் ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன. இருப்பினும், நாட்டில் ஒட்டுமொத்தமாக வெங்காய கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையிருப்பு வெங்காயமும் சந்தைக்கு வரும்
விலையை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் உள்ள buffer stock வெங்காயத்தையும் தேவைக்கேற்ப சந்தையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்த சந்தைகளில் கூடுதல் வரத்து ஏற்படுவதன் மூலம் விலை அழுத்தத்தை குறைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
டெல்லி-என்சிஆர் பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் பாரத் பிராண்ட் கடைகள் மூலம் கிலோ ரூ.35 என்ற விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் நடவடிக்கையும் திட்டமிடப்பட்டுள்ளது.

