கோவா மாநிலம் மபுசாவில் உள்ள பெட்டெம் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 3-வது உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்று தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் 400-க்கும் மேற்பட்ட தாய் பாக்சிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் இருந்து முதல் முறையாக 35 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
வெற்றியுடன் தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு நாமக்கல்லில் சக வீரர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தாய் பாக்சிங் சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் மாஸ்டர் ஷேக் அப்துல்லா கூறுகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாய் பாக்சிங் விளையாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதால் அவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை இவற்றுக்கு மாநில அரசின் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், வீரர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தாய் பாக்சிங் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கி ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு உரிய ஊக்கமளித்தால், சர்வதேச அளவிலான தாய் பாக்சிங் போட்டிகளில் தமிழக வீரர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்றார்.









