நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகப் பெருவிழாவையொட்டி, கடந்த 20ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களைச் சுமந்து கோயிலின் கோபுர உச்சிக்கு ஊர்வலமாகச் சென்றனர். அங்கு வேத மந்திரங்கள் ஒலிக்க, கோபுரக் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரரை தரிசித்து அருள் பெற்றனர்.









