தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இளம் பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆள் நடமாட்டமின்றி அமைதியாகக் காணப்பட்டது.
இந்தச் சூழலில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர் ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய நுழைவாயில் பகுதியில் நின்று பாலிவுட் மற்றும் சமூக வலைதளப் பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். மேலும், அவர்களுடன் இருந்த மற்றொரு பெண் இந்தச் செயலை தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும், அந்த இளம் பெண்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புமிக்க முக்கிய வளாகங்களில் இதுபோன்று சமூக வலைதளப் பதிவுகளுக்காக ரீல்ஸ் வீடியோ எடுப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.









