டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் போராடி தோல்வியைத் தழுவினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஷீ யியை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சிந்து 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் அல்வி ஃபர்ஹான் உடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்திய ஜோடிகளுக்கு வெற்றி
இதற்கிடையே, மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் ரின் இவாஙா–கீ நாகனிஷி இணையை 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றை கடந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடியும் மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப்–யாப் ராய் கிங் இணையை 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

