விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வீரர் வேணுகோபாலன், தேசிய அளவிலான வீல்சேர் பிக்கில் பால் (Wheelchair Pickleball) போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த ஸ்டேட் நேஷனல் டூர்னமென்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அடுத்ததாக ஏசியன் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஏசியன் டூர்னமென்ட்டில் பங்கேற்பதற்காக, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வத்தை நேரில் சந்தித்து அவர் உதவி கோரினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., போட்டிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், பதிவு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்று, 2027ஆம் ஆண்டு அடுத்தகட்ட உலகப் போட்டிகளுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் பிக்கில் பால் விளையாட்டு ஏற்கனவே பிரபலமாக உள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் இது வேரூன்றி வருகிறது. எனினும், தமிழ்நாட்டில் வீல்சேர் பிக்கில் பாலுக்கான விளையாட்டு மைதான வசதிகள் குறைவாகவே உள்ளன. மதுரை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மட்டுமே மைதானங்கள் உள்ளதால், முறையான பயிற்சி பெற மாவட்டத் தலைநகரங்கள் அல்லது விளையாட்டு அரங்கங்கள் அருகில் பிரத்யேக மைதானங்கள் அமைத்துத் தர வேண்டும் என்பதே வீரர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
தற்போது பெங்களூரு பெடரேஷன் மற்றும் சென்னை போன்ற வெளியூர்களில் உள்ள தனியார் அகாடமிகளுக்குச் சென்று தாங்களாகவே முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வருவதாகவும், இதற்கான கட்டணச் செலவுகளைத் தாங்களே ஏற்று வருவதாகவும் வேணுகோபாலன் தெரிவித்தார். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தமிழகத்திற்கென பிரத்யேகமாக வீல்சேர் பிக்கில் பால் அணி உருவாக்கப்பட உள்ளதாகவும், முறையான மைதானம் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டால் விருதுநகர் மாவட்டத்திலிருந்து பல திறமையான வீரர்களை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

