விருதுநகரில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் 42-வது மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் விஜய் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போட்டிகளில் பெண்கள் பிரிவில் 480 பேரும், ஆண்கள் பிரிவில் 700 பேரும் கலந்துகொண்டுள்ளனர். சப்-ஜூனியர் (Sub-Junior) மற்றும் யூத் (Youth) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை மாவட்ட அணி 21 தங்கப் பதக்கங்களுடன் வென்று முதலிடம் பிடித்தது. திருவாரூர் மாவட்ட அணி 11 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஆண்கள் பிரிவு போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநிலப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்குத் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் சிறப்பு மற்றும் இலவசப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளை பஞ்சாப், டெல்லி அல்லது மேற்கு வங்கத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
விளையாட்டுத் துறைக்கு முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். அமைச்சர் ஆதவ் அர்ஜுன் அவர்களும் சிலம்பாட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாநிலத்தில் சுமார் 3 லட்சம் விளையாட்டு வீரர்களும், 50,000-க்கும் மேற்பட்ட ஆசான்மார்களும், 20,000 பயிற்சி பெற்ற நடுவர்களும் உள்ளனர். இவ்வளவு கட்டமைப்புடன் இயங்கும் எங்களது கழகத்திற்கு எஸ்.டி.ஏ.ஐ. (SDAT) அங்கீகாரம் வழங்குவது சற்று மெதுவாக நடந்து வருகிறது. டாக்டர் ரஜினி ஐ.ஏ.எஸ். அவர்கள் சிலம்பாட்ட வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்துள்ள நிலையில், எங்களது கழகத்தின் நீண்டகாலச் சேவையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக எஸ்டிஏஐ அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்திய சிலம்ப சம்மேளனத்தின் கீழ் தற்போது 22 மாநிலங்கள் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் சிலம்பக் கலை வளர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

