நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.
ஆசியாவின் லூர்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவின் அருளைப் பெற உள்ளனர்.
இதனையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்று வருகின்றனர். கும்பகோணம் மறைமாவட்டப் பகுதிகள், அரியலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குழுவாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து, கடந்த 24-ஆம் தேதி மாதா சொரூபம் தாங்கிய வாகனத்துடன் பாதயாத்திரையாக புறப்பட்டனர். மீன்சுருட்டி, அணைக்கரை, திருப்பனந்தாள், திருவாரூர், கீழ்வேளூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை நோக்கி அவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
வழிநெடுகிலும் மாதா சொரூபம் தாங்கிய வாகனத்துடன் “மரியே வாழ்க” என முழக்கமிட்டும், மாதாவின் புகழைப் பாடியும், கும்மியடித்தும் பக்தர்கள் உற்சாகமாக பாதயாத்திரை மேற்கொண்டனர். வரும் 29-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

