ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால், வரும் அக்டோபர் 26-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாற்றப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐப்பசி மாத பவுர்ணமி அக்டோபர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 26-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.09 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
இதற்கிடையே, அக்டோபர் 26-ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு கோயில் நடை சாற்றப்பட்டிருக்கும். இதனால் இந்த காலகட்டத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், பவுர்ணமி தினத்தன்று தரிசனத்திற்கு எவ்வித சிறப்பு முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

