திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹாவில், மகான் செய்கு தாவூது ஒலியுல்லா ஆண்டவரின் 725-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க சந்தனக்கூடு ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வண்ண மின்விளக்குகளால் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம், மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகப் பல்வேறு தரப்பு மக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்து, மகான் செய்கு தாவூது ஒலியுல்லா தர்ஹாவில் பிரார்த்தனை மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை விழா குழுவினருடன் இணைந்து உள்ளூர் நிர்வாகத்தினரும் மேற்கொண்டனர்.

