ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு வேத மந்திரங்களை ஓதி, பாரம்பரிய முறைப்படி புதிய பூணூல் அணிந்து வழிபாடு செய்தனர்.
வேதம் பயிலும் ஆண்கள் பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணியும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக ஆவணி அவிட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. வேதம் மற்றும் ஆன்மிகத்தை போதித்த முனிவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, ஆன்மிக ஒழுக்கத்தை புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.
இதையொட்டி நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவில் வெளித் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும் ஆவணி அவிட்டம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதிகாலையிலேயே புனித நீராடி, புத்தாடை அணிந்து கோவிலில் திரண்ட அவர்கள், முதன்மை புரோகிதர்கள் முன்னிலையில் வேத மந்திரங்களை ஓதினர்.
தொடர்ந்து அனைவரும் வரிசையாக அமர்ந்து பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டு புதிய பூணூலை அணிந்து கொண்டனர். இதன்பின்னர் ஜெபம் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.
மேலும், மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிக சூழல் நிலவியது.

