விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய இன்று வருகை தந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், சித்தர்கள் வாழ்ந்து வழிபடும் ‘சித்தர்களின் சொர்க்க பூமி’ என்று போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில், தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களை முன்னிட்டு 8 நாட்கள் மட்டுமே மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையும் கோயில் நிர்வாகமும் அனுமதி அளித்து வருகின்றன.
இக்கோயிலின் மிக முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை திருவிழா வரும் 12-ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வரும் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து சிறப்பு அனுமதி வழங்கியுள்ளன.
இந்நிலையில், அனுமதி அளிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாகவே, அதாவது இன்று சாமி தரிசனம் செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் குவிந்தனர். ஆனால், இன்று அனுமதி இல்லாத காரணத்தால் வனத்துறையினர் அவர்களை மேலே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள், வேறு வழியின்றி மலையடிவாரப் பகுதியிலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினர்.

