விருதுநகர் அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு சக்தி விநாயகர் மற்றும் பாலமுருகன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகளை நடத்தினர். யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்றபோது வானில் கருட பகவான் வட்டமிட்டு பறந்ததாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த காட்சி விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்களை பரவசமடையச் செய்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி நிறைவடைந்ததும், கோபுரத்திலிருந்து தெளிக்கப்பட்ட புனித நீரை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ஏற்றுக்கொண்டனர். மேலும், குழந்தை வரம் வேண்டி வந்த தம்பதியினருக்கு தீட்சிதர் அருள்வாக்கு வழங்கிய நிகழ்வும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரம்மாண்டமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

