பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
விழாவையொட்டி மாலை 6 மணியளவில் அம்மனுக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகா தீபாராதனைக்கு பின்னர் பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆவணி மாத பௌர்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியங்கள் பெருகவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
விழாவுக்கான அபிஷேகப் பொருட்கள் மற்றும் அன்னதான ஏற்பாடுகளை சங்குபேட்டை அன்னதானக் குழுவினர் செய்திருந்தனர். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை சங்குபேட்டை அன்னதானக் குழுவினர் முன்னின்று நடத்தினர். இதில் சங்குபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

