விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வத்திராயிருப்பு பகுதி நீர் வளமும், நில வளமும் செழிப்புடன் விளங்குவதற்கு மழைக்கு அதிபதியான முத்தாலம்மனே காரணம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒரு வார காலம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கோயில் திருவிழா கடந்த அக்டோபர் 7ஆம் தேதி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஆறு நாட்கள் நடைபெற்ற கலை விழாவின் நிறைவாக, இன்று அதிகாலை முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கப்பட்டது.
தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் கரகம் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வத்திராயிருப்பு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் பக்த சபை நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இணைந்து செய்திருந்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

