நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஐப்பசி திருத்தேர் விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா வியாழக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருத்தேர் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான விழா கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கம்பம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கோயிலைச் சுற்றி வலம் வந்தபின் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, கோயில் பூசாரிகளால் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சன்னதி முன்பாக கம்பம் நடப்பட்டது. இந்நிகழ்வில் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனைத் தரிசித்தனர். இக்கோயிலில் நடப்படும் கம்பமானது ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து, ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனைப் பார்த்தவாறு அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

