மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.
இதனை முன்னிட்டு, மூலவர் உக்தவேதீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அன்னம், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.





