நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காமேஸ்வரத்தில் உள்ள சிவகாமி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர்கள் முளைப்பாரியை எடுத்துச் சென்று கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அப்போது மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து உற்சாகமாக நடனமாடி அம்மனை வரவேற்றனர். இந்தக் காட்சிகள் பொதுமக்களையும் பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவை முன்னிட்டு காமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தொழில் மறியல் செய்து, திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
தொடர்ந்து வரும் 31-ம் தேதி வரை கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பால்குடம் எடுத்தல், வெண்ணெய் காப்பு, குங்குமக் காப்பு, சுவாமி வீதி உலா, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காமேஸ்வரம் மீனவ கிராமம் முழுவதும் திருவிழா உற்சாகம் களைகட்டியுள்ளது.

