திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற பெரிய ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி 5-வது சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.1,93,418 வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு, அப்பகுதியைச் சார்ந்த திரளான பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை உண்டியலில் செலுத்தி வழிபாடு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோயில் அன்னதான கூடத்தில் கோயில் ஆய்வாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் தற்காலிக உண்டியல் மூலம் ரூ.94,731-ம், நிரந்தர உண்டியல் மூலம் ரூ.79,798-ம், அன்னதான உண்டியல் மூலம் ரூ.18,889-ம் என மொத்தம் ரூ.1,93,418 காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

