தேனி: மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் ஓரிரு நாட்களில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகமலை, வருசநாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றக் கூடாது என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த ஒரு மாதமாக அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முறையாக வாதிடப்படாததே தற்போதைய தீர்ப்புக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வலுவான அறிக்கையை தாக்கல் செய்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
“மலைவாழ் மக்களை வெளியேற்றுவது ஒருபோதும் நடைபெறாது. உச்சநீதிமன்றத்தில் அவர்களின் உரிமையை தவெக அரசு நிச்சயம் பெற்றுத் தரும்” என ஜெகநாத் மிஸ்ரா உறுதியளித்தார்.
வனத்துறை நோட்டீஸ் குறித்து நடவடிக்கை
மலைவாழ் மக்களை வெளியேற்றுவதற்காக வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி வருவது குறித்து தனது கவனத்திற்கு இதுவரை தகவல் வரவில்லை என அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசி, வனத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், வனத்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் விரைவில் மலைப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

