தேனி: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சபரி ஐங்கரனை தொடர்புபடுத்தி, அவரது உறவினர் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், “கலப்பு திருமணம் திராவிடம் கொண்டு வந்தது” என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும், அதனை நீக்குமாறு அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்எல்ஏ சபரி ஐங்கரன் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவில், காவல் ஆய்வாளர், டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இரவு நேரத்திற்குள் வீட்டில் இருக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அது உண்மையில் எம்எல்ஏ சபரி ஐங்கரனின் குரல்தானா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மேலும், இந்த உரையாடல் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாகவும், தற்போது ஆடியோ வெளியே வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பான விவாதத்தின்போது சபரி ஐங்கரன் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த ஆடியோ விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

