நெல்லை வி.எம்.சத்திரம் பகுதியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பொறுப்பேற்றதில் இருந்தே நாள்தோறும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் அவலநிலை நிலவுகிறது. தூத்துக்குடி, உடன்குடி, வடசென்னை, மேட்டூர் உள்ளிட்ட அனல்மின் நிலையங்களின் உற்பத்தி திறன் தேசிய அளவில் சராசரியாக 70 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெறும் 30 முதல் 34 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, வெளிமாநில தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதே நோக்கமாக உள்ளது.
சுமார் 15,000 மெகாவாட் உற்பத்தி கட்டமைப்பு தயாராக இருந்தும் அதை செயல்படுத்தாமல் விட்டுவிட்டு, யூனிட் ஒன்றுக்கு ரூ.37 வீதம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்குவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், முதல்வர் விஜய் ஆந்திராவிற்கு சென்றது மக்கள் நலனுக்காக அல்ல, வெறும் வியாபார ஒப்பந்தங்களுக்காக மட்டுமே என்றார்.
செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் அவர்களைக் கண்டுகொள்வதில்லை எனக் குறிப்பிட்ட அப்பாவு, தேர்தலுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்களையும் செவிலியர்களையும் ஆதரித்துப் பேசியவர்கள், ஆட்சிக்கு வந்த பின் பணி நிரந்தரம் கோரும் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகத் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அவர், முன்பு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்ற 'அம்பை 16' ரக அரிசி இன்று ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார். "விஜய் முதல்வராக செயல்படவில்லை; முதலமைச்சர் போல நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறாரே தவிர, நாட்டு மக்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ரீல் விட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்னமும் ‘ரீல்’ உலகத்திலேயே இருக்கிறார்களே தவிர, நிஜ வாழ்க்கைக்கு வரவில்லை" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

