விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆகியும், இதுவரை எந்தவிதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று சிபிசிஐடி (CBCID) வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று சிபிசிஐடி போலீசார் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரது தாய் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அரசின் அலட்சியப் போக்கே சிறுமி மாயமான சம்பவத்திற்குக் காரணம் என்று கூறி, ஆலம்பூண்டியில் இன்று (அக்.22) தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுமி காணாமல்போன 3ஆவது நாளில் இருந்தே காவல்துறையைத் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னைத் தொடர்புகொண்டால்கூட அவர்கள் பதிலளிக்கவில்லை" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "தற்போதைய ஆட்சியில் நாள்தோறும் பொய்கள் பரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக டெல்லி வரை சென்று பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொள்ளை, கொலை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்தாடுகிறது. இதற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொண்டு தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கடந்த 5 மாத கால ஆட்சியில் அரசின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து நடைபெறும் இத்தகைய போராட்டங்கள், அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

