திருப்பூர்: திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் ரூ.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நொய்யல் உயர்மட்ட மேம்பாலம், சுமார் 20 ஆண்டுகள் நீடித்த இழுபறிக்குப் பின்னர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி பாலத்தைத் திறந்து வைத்தார்.
அணைப்பாளையம் பகுதியில் மங்களம் சாலையையும் கல்லூரி சாலையையும் இணைக்கும் வகையில், கடந்த 2006ஆம் ஆண்டு ரூ.19 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக முடங்கியது.
தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறைக்குச் சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததை அடுத்து, திருத்திய மதிப்பீட்டின்படி திட்டச் செலவு ரூ.42 கோடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் கட்டுமானப் பணிகள் வேகமடைந்து, பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்தன. இருப்பினும், பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தாமதமாகி வந்தது.
சமீபத்தில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, போக்குவரத்து பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, திறக்கப்படாமல் இருந்த புதிய பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள் பயணிக்கத் தொடங்கினர். இந்நிலையில், இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரானவரே தலைமை வகித்தார். அமைச்சர் அருண்ராஜ் பாலத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் புதிய பாலத்தில் பயணம் மேற்கொண்டார்.
நொய்யல் ஆறு மற்றும் ரயில் தண்டவாளத்தைக் கடந்து சுமார் 1.07 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்டப் பாலம், மங்களம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கிறது. இதன் மூலம் அப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாகப் போக்குவரத்து சிரமங்களைச் சந்தித்து வந்த பொதுமக்களும், இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகளும் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

