Settings

முகப்பு/அரசியல்/மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய அரசுகளின் அலட்சியமே காரணம்: துரை வைகோ எம்பி பேட்டி
அரசியல்

மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய அரசுகளின் அலட்சியமே காரணம்: துரை வைகோ எம்பி பேட்டி

🕒 21 அக்., 2026, 05:34 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய அரசுகளின் அலட்சியமே காரணம்: துரை வைகோ எம்பி பேட்டி
✨

AI Highlights

  • •கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் கட்டமைப்பில் முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் கட்டமைப்பில் முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், உள்ளாட்சித் தேர்தல், மின்சாரத் துறை நிலவரம், அரசின் நிதிநிலை மற்றும் பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் தேர்தல் மற்றும் மீதமுள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை மின்சாரத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசுக்கு சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் சுமை உள்ளதால், எடுத்தவுடனேயே அதனை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், துறை சார்ந்த அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில், அது குறித்த விவரங்களை ஆராய வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், முந்தைய ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது டெண்டர்களில் 30 முதல் 40 சதவீதம் வரையிலும், சில இடங்களில் 50 சதவீதம் வரையிலும் கமிஷன் என்ற பெயரில் முறைகேடுகள் நடந்து வந்ததாக குற்றம்சாட்டினார். தற்போது அந்த லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே அரசாங்கத்தின் செலவுகள் குறையத் தொடங்கியுள்ளன என்றார்.

மின் கட்டமைப்பு மற்றும் உப்பூர் மின் திட்டம் குறித்து குறிப்பிடுகையில், கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் கட்டமைப்பில் முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றார். குறிப்பாக, உப்பூர் மின் திட்டத்திற்காக 13,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, அதில் 6,000 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் உப்புக்காற்று பட்டு வீணாகிவிட்டதாக அவர் தெரிவித்தார். வரும் 5 ஆண்டுகளில் இந்த சீர்கேடுகளை சரிசெய்து மின்சார தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது தற்போதைய அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மழை வெள்ளப் பணிகள் குறித்துப் பேசிய துரை வைகோ, சென்னையில் மழை வெள்ளப் பணிகளுக்காக கடந்த அரசு தரப்பில் 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது சரியான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்றார். ஏறக்குறைய 24 கிலோமீட்டர் தொலைவுக்கு மழைநீர் கால்வாய் வெட்டப்பட்டாலும், அதனை மற்ற கால்வாய்களுடன் இணைக்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாததால் அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிவகங்கை கொலை சம்பவம் மற்றும் தனிநபர் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தனி மனித தாக்குதல், கொச்சைப்படுத்தி பேசுவது மற்றும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற விஷயங்கள் ஏற்புடையதல்ல என்றார். சிவகங்கை கொலை சம்பவம் குறித்து வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்குவதுடன் நின்றுவிடாமல், சமூக மற்றும் சாதி ரீதியாக மிரட்டல் விடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம்; அது அவரவர் உரிமை என்றும், இறுதி முடிவை எப்போதும் மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔