விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளுடன் நேரடியாக இணைந்து புதிய வணிக வாய்ப்புகளைப் பெறும் வகையில், ஆகஸ்ட் 27, 28-ம் தேதிகளில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம், சென்னை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மாவட்டத்தில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளை நேரடியாக அறிந்து கொள்ளவும், தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதுடன், விற்பனையாளர் பதிவு, அரசு கொள்முதல் நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களின் கொள்முதல் தேவைகள் குறித்த தகவல்களையும் பெற முடியும்.
விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில், உணவுப் பதப்படுத்துதல், அட்டைபெட்டி, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், மருத்துவக் கட்டுத்துணிகள், ரப்பர் பொருட்கள், பொறியியல் உதிரிபாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்ற வணிக வாய்ப்புகளைத் தேர்வு செய்து பங்கேற்கலாம். தகுதியான நிறுவனங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சோதனை கொள்முதல், விருப்பக் கடிதம், விற்பனையாளர் பதிவு மற்றும் தொடர் கொள்முதல் உள்ளிட்ட வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் தொழில் தொடர்புகள் நிகழ்வுடன் முடிவடையாமல், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து நடைமுறை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம் விருதுநகர் மாவட்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம்–சென்னை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு, விருதுநகர் மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலகங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி, சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் புதிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

