விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆமத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர், இளைஞர்கள் வேலை தேடும் காலங்களில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சமாக கொடுத்து வேலை பெறக்கூடாது என அறிவுறுத்தினார். கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலை இனி இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், யாரேனும் வேலைக்காக பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்றும், அரசு தரப்பில் பணம் கேட்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளம் சிறார்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை பாராட்டினார். இதுதொடர்பாக ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் முன்னிலையில் அவரே விளக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு, நல்ல பாதையில் செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், தன்னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக பொறுப்பில் அமர்த்திய முதல்வர் விஜய் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
“விஜய் பிரதமராக வேண்டும்”
நிகழ்ச்சியின் இறுதியில் அரசியல் ரீதியாக பரபரப்பான கருத்தையும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார். “இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் விஜய் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் முதல்வர் விஜய் பிரதமர் என்ற இலக்கை நோக்கியே பயணிப்போம்” என்று அவர் பேசினார்.
அமைச்சர் விஜய் பெயரை குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, “இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர்” என அமைச்சர் தெரிவித்தபோது அரங்கில் மாணவர்கள் உற்சாகம் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

