மேற்கு தொடர்ச்சி மலையில் காணி பழங்குடியின மக்களுடன் தங்கிய அமைச்சர் அருண்ராஜ்! அதிரடி அறிவிப்புகள்!காணி பழங்குடியின மக்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் பாதுகாக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காணி பழங்குடியின மக்களின் குடியிருப்பில், தனது இரண்டு நாள் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு தங்கிய அமைச்சர் அருண்ராஜ், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்கு வருகை தந்த அமைச்சருக்கு, அப்பகுதி மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், காணி பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தி வரும் மூலிகை மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் ஆவணப்படுத்தப்படும் என்றார். மேலும், அப்பகுதியில் துணை சுகாதார நிலையம் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், முந்தைய ஆட்சியின்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தற்போது நடவடிக்கைகள் உள்ளதாகவும், இது குறித்து உரிய பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வெற்றிப் பயணத் திட்டம் குறித்த புகார்கள் மற்றும் பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு, உரிய நேரத்தில் முதலமைச்சரின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.

