இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, நெல்லையில் வரும் 14-ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மாவட்டத் தலைவர்கள் ராமேஸ்வரன் மற்றும் துரை ஆகியோர் தலைமையில் இந்தியா கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் விவரங்களை வெளியிட்டார்.
கடந்த அக்டோபர் 3, 2026 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், மாணிக்கம் தாகூர் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் நடைபெற்ற நெல்லை மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற 14-ஆம் தேதி காலையில் நெல்லை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மதிமுக சார்பில் நிஜாம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீராம், சேதுராமலிங்கம், கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்து வளவன் மற்றும் IUML சார்பில் அப்சரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

