திமுக தொண்டர்களை அவதூறான வார்த்தைகளால் பொதுவெளியில் விமர்சித்த நாஞ்சில் சம்பத் மற்றும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் திமுக வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.மாலைராஜா புகார் மனு அளித்துள்ளார் நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாகச் செயல்பட்டு வருகிறேன். என்னைப் போல உலகெங்கும் சுமார் 3 கோடி தொண்டர்கள் இக்கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 20.08.2024 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை கொடுங்கையூரில் உள்ள வேலாயுதம் அரங்கத்தில் 'பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் சார்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. "த.வெ.க. அரசு 100 நாள் ஆட்சி" என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த விவாத நிகழ்ச்சியில் தவெக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், விவாதத்தின் இடையே என்னை போன்ற திமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு மிகவும் அசிங்கமான, அநாகரிகமான அவதூறு வார்த்தையைப் பயன்படுத்திப் பேசினார். இந்த நிகழ்ச்சி சமூக வலைதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நாஞ்சில் சம்பத் பேசிய இந்த அவதூறு பேச்சை எனது குடும்பத்தினரும், உறவினர்களும், கட்சியின் பிற தொண்டர்களும் நேரடியாகப் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள சுமார் 3 கோடி திமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பேச்சு அமைந்துள்ளது. எனவே, திமுக தொண்டர்களை அநாகரிகமாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீதும், அந்தப் பேச்சை நேரலையாக ஒளிபரப்பிய 'பிகைண்ட்வுட்ஸ்' யூடியூப் சேனல் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமினிதேவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
திமுகவினரை அவதூறாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை போலீஸ் கமிஷனரிடம் முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா புகார்!
🕒 21 ஆக., 2026, 11:21 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
