விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் புலித்தேவர் பெயர் சூட்ட வேண்டும் எனப் பாண்டியநாடு மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
பாண்டியநாடு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் முத்துராஜ் பாண்டியன் தலைமையில் வழங்கப்பட்ட இந்த மனுவில், உலகப் புகழ்பெற்ற ஆண்டாள் திருக்கோயில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி கடந்த 1751 முதல் 1756 வரை மாமன்னர் புலித்தேவரின் ஆளுகையின் கீழ் இருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்ட மறுத்து புலித்தேவர் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போரின் நினைவாகவும், தமிழர்களின் வரலாற்று அடையாளத்தைப் போற்றும் வகையிலும் புதிய பேருந்து நிலையத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது பாண்டியநாடு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் முத்துராஜ் பாண்டியன், மாநிலச் செயலாளர் மணி சேதுபதி மற்றும் நிர்வாகிகளான பாண்டித்துரை, சந்தோஷ், கருப்பசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

