துபாய் சந்திப்பு, மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக தமிழக அரசு மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமூக வலைதளப் பதிவில் அவர் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தவெக தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய், ஒன்றிய பெண் அமைச்சர், ஆந்திர முதலமைச்சர் மற்றும் ஒரு தமிழக நடிகை ஆகியோர் துபாயில் சந்தித்து திமுகவுக்கு எதிராக புதிய கட்சி தொடங்க பாஜகவிடம் நிதி பெற்றதாகத் துபாய் வாழ் தமிழர்கள் கூறுவதை மறுக்க முடியுமா என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததும், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு பின்னர் முடக்கப்பட்டதும் துபாய் சந்திப்புக்கான சாட்சிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் ஆந்திராவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹட்சன் பால் நிறுவனத்தின் தலைவர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் அரசு பால் கொள்முதல் குறைக்கப்பட்டு ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது ஆந்திர முதலமைச்சரின் நிறுவனத்திற்கு நடிகர் விஜய் செய்யும் நன்றிக்கடன் என்றால், தமிழக விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் ஆகாதா என்றும் அவர் வினவியுள்ளார்.
தவிர, தமிழகத்தின் மின் உற்பதியைக் குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, யூனிட் ரூ.5-க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஆந்திர நிறுவனத்திடம் இருந்து ரூ.35 வீதம் 4500 மெகாவாட் கொள்முதல் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் பெற 'ஆந்திர ரேட்டி கேங்' உங்களை ஆந்திரா அழைத்துச் செல்கிறதா என்றும் அப்பாவு தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

