பொள்ளாச்சியில் உள்ள கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இதில், அப்துல் கலாமின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். பொள்ளாச்சி–பாலக்காடு சாலையில் அமைந்துள்ள இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் அபு இக்பால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைகள், அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகிய பண்புகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, அப்துல் கலாமின் கொள்கைகளையும் லட்சியங்களையும் பின்பற்றுவதாக உறுதியேற்று மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து, செயலாளர் எஸ்.டி. ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

