பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவிகளையும் அதிமுக வேட்பாளர்கள் கைப்பற்றும் வகையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் வலியுறுத்தினார்.
பெரம்பலூரில் நகர அதிமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, கட்சியை மேலும் வலுப்படுத்துவது மற்றும் அமைப்பின் வளர்ச்சிக்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவிகளிலும் அதிமுக வேட்பாளர்களை போட்டியிடச் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள், மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

