சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்திற்கு நேரடிப் பேருந்து வசதிகள் இல்லாததால், நோயாளிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இப் பகுதிகளுக்குப் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம் வெற்றி பெற்றால் இப்பகுதிகளுக்குப் பேருந்து சேவை தொடங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீர்த்தனா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதன்பின், தொடக்க விழாப் பேருந்திலேயே ஆட்சியர் சுகபுத்ரா, சார் ஆட்சியர் முகம்மது இர்பான் மற்றும் பயணிகளுடன் இணைந்து அமைச்சர் பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:
"கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அளித்த வாக்குறுதியின்படி, ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைப் பாதையில் 4 பேருந்துகள் நாள்தோறும் 10 முறை வந்து செல்லும் வகையில் இச்சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல், தேர்தலின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு நிச்சயமாக நிறைவேற்றும். சிவகாசி மக்களின் அத்தனை வளர்ச்சித் தேவைகளும் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்."
மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவை ஏழை எளிய மக்கள், பெண்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

