காட்டுப்புத்தூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோ. கோகுலகிருஷ்ணன் (21) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செ. அருள் சரவணன் (29) என்பவருக்கும் இடையே விசிக செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2018 ஜனவரி 16 அன்று நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
அன்றிரவு காந்தி நகர் பூங்கா தெரு வழியாக நடந்து சென்ற கோகுலகிருஷ்ணனை, அருள் சரவணன் மற்றும் அவரது சகோதரர்களான நவீன்பிரபு (24), தனபால் என்ற முத்து (19) ஆகியோர் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லப்பட்ட கோகுலகிருஷ்ணனின் சகோதரர் கலைவாணன் அளித்த புகாரின்பேரில், காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருள் சரவணன், நவீன்பிரபு மற்றும் தனபால் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.









