சீர்காழி தடாளன் கீழத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவர் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, காரில் ஊர் திரும்பியுள்ளார். அப்போது, மங்கைநல்லூர் அருகேயுள்ள தத்தங்குடி ரவுண்டானா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநர் செல்வம் கண் அயர்ந்ததன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த ரவுண்டானா தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் முகம் மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த செல்வம், உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஏழு தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நடைபெற்ற தத்தங்குடி ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விக்கும் வகையில் சோலார் பிளிங்கர் விளக்குகளோ அல்லது முறையான தடுப்புகளோ (பேரிகார்டுகள்) இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களில் சாலைத் தடுப்புகள் சரியாகத் தெரியாததால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்குவதாகவும், பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து போதிய எச்சரிக்கை விளக்குகளையும், தடுப்புகளையும் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









